இலங்கையில் வாராந்தம் 2 புதிய எச்.ஐ.வி. தொற்றுக்கள் பதிவு : LBCH தகவல்
இலங்கையில் வாராந்தம் 2 புதிய எச்.ஐ.வி. தொற்றுக்கள் பதிவு செய்யப்படுவதன் காரணமாக எச்.ஐ.வி. மற்றும் எயிட்ஸ் நோய்த்தாக்கம் பரவுவதை தடுப்பதற்கு கூட்டாண்மை நிறுவனங்களின் ஆதரவு தேவையென கொலிஷன் நிறுவனம் தெரிவித்துள்ளது.
சினமன் லேக்சைட் ஹோட்டலில் கடந்த 10 ஆம் திகதி திங்கட்கிழமை இடம்பெற்ற எச்.ஐ.வி. மற்றும் எயிட்ஸ் தொடர்பான இலங்கை வர்த்தக ஒன்றிணைவு அமைப்பின் (LBCH) வருடாந்த செயலமர்வின் போதே அந் நிறுவனம் இதை சுட்டிக்காட்டியிருந்தது.
இந்த வருடாந்த செயலமர்வில் தமது ஆதரவினை வெளிப்படுத்தும் வகையில் 50 க்கும் அதிகமான மிகச்சிறந்த கூட்டாண்மை நிறுவனங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டிருந்தனர்.
தேசிய STD/AIDS கட்டுப்பாட்டு திட்டத்தின் பால்வினை ஆலோசகர், வைத்தியர் கே.ஏ.எம்.ஆரியரட்ன மூலம் இலங்கையிலும், உலகளவிலும் பரவிவரும் எச்.ஐ.வி. மற்றும் எயிட்ஸ் நோய்த்தாக்கத்தின் தற்போதைய நிலைமை குறித்த விளக்கங்கள் வழங்கப்பட்டன.
இலங்கையில் எச்.ஐ.வி. தொற்றினால் பாதிக்கப்பட்ட பெரும்பாலானவர்கள் 16 வயது முதல் 49 வயதுக்குட்பட்டவர்களாக இருப்பதால், இந்த நோய்த்தாக்கம் சமூகம் மற்றும் பொருளாதாரத்தின் மீது பாதகமான விளைவுகளை ஏற்படுத்தி வருகிறது.
எனவே தொழில்புரியும் மக்கள் மத்தியில் இந்த விடயம் குறித்து தெளிவுபடுத்தல்களையும், விழிப்புணர்வுகளையும் முன்னெடுக்கப்பட வேண்டியமை கட்டாயமாகும் என ஆரியரட்ன தெரிவித்தார்.
இதன் காரணமாகவே LBCH ஆனது, அதன் அங்கத்துவ நிறுவனங்கள் மத்தியில் கல்வி திட்டங்கள் உள்ளடங்கலாக இலவச பயிற்சி கருத்தரங்குகளை முன்னெடுத்து வருவதில் முக்கிய பங்காற்றி வருவதாக எச்.ஐ.வி. மற்றும் எயிட்ஸ் தொடர்பான இலங்கை வர்த்தக ஒன்றிணைவு அமைப்பின் வெளிச்செல்லும் தலைவர் அநிர்வான் கோஷ் தஸ்டிடார் குறிப்பிட்டார்.
கொலிஷன் நிறுவனமானது கூட்டாண்மை துறைகளிடையே தங்களது பணியிடத்தில் எச்.ஐ.வி. மற்றும் எயிட்ஸ் தாக்கம் குறித்த கொள்கைகள் வகுப்பதை ஊக்குவித்து வருகின்றது.
மேலும் இந்த வருடாந்த செயலமர்வில் ஜோன் கீல்ஸ் ஹோல்டிங் பிஎல்சி நிறுவனத்தின் CSR பிரிவின் தலைவி நதீஜா தம்பையா LBCH இன் புதிய தலைவராக அறிமுகம் செய்து வைக்கப்பட்டார்.
விழிப்புணர்வு 'தலையணையை கைமாற்றுதல்" எனும் புதுமையான கருத்திட்டத்தினூடாக இலங்கையில் எச்.ஐ.வி. மற்றும் எயிட்ஸ் தாக்கத்தை தடுப்பதற்கு கூட்டுறவு நிறுவனங்களை ஊக்குவிப்பதே LBCH இன் குறிக்கோளாக அமைந்துள்ளது.
LBCH இன் அங்கத்துவ நிறுவனங்களுள் சிட்டி பேங்க், சிலோன் டுபாக்கோ நிறுவனம், Deutschebank, Access Engineering, சன்ஷைன் ஹோல்டிங்ஸ், செவ்றோன், ஸ்டான்டர்ட் சார்ட்டட் வங்கி, DFCC வங்கி, ஹற்றன் நெஷனல் வங்கி மற்றும் எட்டிசலாட் போன்ற மிகச்சிறந்த கூட்டாண்மை நிறுவனங்கள் உள்ளடங்குகின்றன.
மேலும் இச் செயலமர்வில் இத்தொற்று சம்பந்தமாக விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நீட்டா பெர்னாண்டோ நடித்த “Swara” திரைப்படத்தின் ஒரு சிறிய பகுதியும், “Stripping the Stigma” மும் காட்சிப்படுத்தப்பட்டன.
LBCH ஆனது, சுகாதார அமைச்சின் தேசிய STD/AIDS கட்டுப்பாட்டு திட்டம், தொழில் அமைச்சு, ILO, UNAIDS, இலங்கை வர்த்தக சம்மேளனம் மற்றும் தொழிலாளர் சம்மேளனம் போன்ற தனியார், கூட்டுறவு நிறுவனங்களுடன் இணைந்து எச்.ஐ.வி. மற்றும் எயிட்ஸ் நோய்த்தாக்கத்தை தடுத்தல் மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.











0 comments:
Post a Comment