இலங்கையை வெள்ளையடிப்புச் செய்தது இந்தியா

இலங்கை அணிக்கெதிரான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்தியா 5-0 என்ற கணக்கில் கைப்பற்றி இலங்கை அணியை வெள்ளையடிப்புச் செய்தது.
இரு அணிகளுக்குமிடையிலான 5ஆவது இறுதி ஒருநாள் போட்டி நேற்று பகல்- இரவு ஆட்டமாக ராஞ்சியில் நடைபெற்றது.
இப்போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது. இலங்கை அணியில் டிக்வெல்ல புதிதாக இணைக்கப்பட்டிருந்தார். இந்திய அணியில் ரெய்னாவுக்குப் பதிலாக புதுமுக வீரர் கேதர் ஜாதவ் இணைக்கப்பட்டிருந்தார். அவருக்கு இது முதல் சர்வதேச போட்டியாகும்.
மெத்தியூஸின் சதத்தால் இலங்கை அணி 50 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 286 ஓட்டங்களைப் பெற்றது. மெத்யூஸ் 116 பந்தில் 6 பவுண்டரி, 10 சிக்சருடன் 139 ஓட்டங்களை  குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காது இருந்தார். இந்திய அணி சார்பில் குல்கர்னி 3 விக்கெட் வீழ்த்தினார்.
287 ஓட்டங்களை பெற்றால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களம் இறங்கியது. தொடக்க வீரர் ரகானே 2 ஓட்டங்களடனும் கடந்த போட்டியில் 264 ஓட்டங்கள் குவித்து சாதனைப் படைத்த ரோகித் சர்மா 9 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர்.
இந்நிலையில் 3ஆவது விக்கெட்டுக்காக அணித்தலைவர் விராட் கோலி- அம்பதி ராயுடு ஜோடி சேர்ந்தனர். இந்த ஜோடி சிறப்பாக விளையாடி இந்திய அணியை வெற்றி நோக்கி அழைத்துச் சென்றது. சிறப்பாக விளையாடிய ராயுடு 59 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து வெளியேறினார். அதன்பின் வந்த வீரர்கள் சீரான இடைவெளியில் ஆட்டமிழக்க இந்திய அணி வெற்றி பெறுமா? என்ற சந்தேகம் ஏற்பட்டது.
ஆனால், விராட் கோலி களத்தில் இருந்ததால் இறுதி வரை நிலைத்து நின்று அக்சார் பட்டேலுடன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
அக்சார் பட்டேல் களம் இறங்கும்போது இந்திய அணி வெற்றிக்கு 40 பந்தில் 56 ஓட்டங்கள் தேவைப்பட்டது. அப்போது விராட் கோலி சதம் அடித்து களத்தில் இருந்தார். 45ஆவது ஓவரில் அக்சார் பட்டேல் ஒரு பவுண்டரி அடித்தார். அந்த ஓவரில் இந்தியாவிற்கு 7 ஓட்டங்கள் கிடைத்தது. 46 ஆவது ஓவரை மெண்டிஸ் வீசினார். இந்த ஓவரில் விராட் கோலி ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர் விளாசினார். இதனால் இந்த ஓவரில் 13 ஓட்டங்கள் கிடைத்தது.
அதன்பின் இந்திய அணியின் வெற்றிக்கு 24  பந்தில் 34 ஓட்டங்கள் தேவைப்பட்டது. 47 ஆவது ஓவரை எரங்க வீசினார். இந்த ஓவரில் அக்சார், கோலி தலா ஒரு பவுண்டரி விரட்ட 13 ஓட்டங்கள் கிடைத்தது. இதனால் கடைசி 3 ஓவரில் 21 ஓட்டங்கள் தேவைப்பட்டது. 48 ஆவது ஓவரை மெத்யூஸ் வீசினார். இந்த ஓவரில் 8 ஓட்டங்கள் எடுக்கப்பட்டது.
கடைசி இரண்டு ஓவரில் 13 ஓட்டங்கள் தேவைப்பட்டது. 49 ஆவது ஓவர் முதல் பந்தில் விராட் கோலி யாரும் எதிர்பார்க்காத வகையில் ஹெலிகொப்டர் ஷொட் மூலம் இமாலய சிக்ஸர் விளாசினார். இந்த ஓவரின் 4 ஆவது பந்தில் மேலும் ஒரு சிக்சர் விளாசி போட்டியை முடிவுக்கு கொண்டு வந்தார் கோலி.
இதனால் இந்தியா 48.4 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 288 ஓட்டங்கள் குவித்து 3 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. வராட் கோலி 126 பந்தில் 12 பவண்டரி, 3 சிக்சருடன் 139 ஓட்டங்களையும் அக்சார் பட்டேல் 14 பந்தில் 2 பவுண்டரியுடன் 17 ஓட்டங்களையும் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காது இருந்தனர்.
இந்த வெற்றியின் மூலம் இந்தியா 5-0 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றி இலங்கை அணியை வெள்ளையடிப்புச் செய்தது.

0 comments:

Post a Comment