இளம் பெண்களுக்கு மாரடைப்பு ஏற்பட காரணம்.

பெருநகரங்களில் பணிபுரியும் பெண்கள் சமைக்கும் நேரத்தைக் குறைக்கும்பொருட்டு, பதப்படுத்தப்பட்ட உடனடி உணவுகளையே இப்போது அதிகமாகப் பயன்படுத்துகிறார்கள். இந்த உணவுகளில் உப்பு அதிகம்; டிரான்ஸ் கொழுப்பு கூடுதல். இதனால் ரத்த அழுத்தம் எகிறுகிறது. 

இளம் வயதிலேயே நீரிழிவு நோய் வந்துவிடுகிறது. இதயத்துக்குக் கேடு செய்யும் டிரைகிளிசரைட்ஸ், எல்.டி.எல். கொழுப்பு போன்றவை ரத்தத்தில் அதிகரித்து, இவர்களின் இதயத்துக்கு ஆபத்தை ஏற்படுத்துகின்றன. 

இளம் பெண்களுக்கு மாரடைப்பு ஏற்பட இன்னொரு முக்கியக் காரணம், பணிச்சுமை ஏற்படுத்தும் மனச்சுமை. குறிப்பாக, தகவல் தொழில்நுட்பத் துறையில் பணிபுரிபவர்கள் ஓய்வின்றி உழைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். 

குறைந்த அளவு காலக்கெடுவுக்குள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளை முடித்துத்தர வேண்டிய அவசரமும் அவசியமும் இவர்களுக்குப் பெரிய மனச்சுமையைத் தருகிறது. இதுமட்டுமன்றி, பெண்களுக்குக் குடும்பத்தைக் கவனித்துக்கொள்ள வேண்டிய பொறுப்பும் கூடுதல் மன அழுத்தத்தைத் தருகிறது. 

இதனால், உழைக்கும் பெண்களிடம் புகைக்கும் பழக்கமும், வார இறுதிக் கொண்டாட்டங்களில் மது அருந்தும் பழக்கமும் அதிகரித்துவருவதாக அண்மையில் வந்துள்ள புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. ஆம், பணிக்குச் செல்லும் பெண்களில் பலர் தங்கள் பணிச்சுமையை மறக்க, புகைபிடிக்கும் பழக்கத்துக்கும் மது அருந்தும் பழக்கத்துக்கும் உள்ளாகின்றனர். 

இவை இரண்டும் இதயத்துக்கு ஆபத்து தரும் என்பதைத் தெரிந்தே செய்கின்றனர். இன்றைய பெண்கள் தங்கள் மனச்சுமையைக் குறைப்பதற்கு முறையான ஓய்வு, சுற்றுலா, குடும்பத்தினருடன் உறவை வளர்த்துக்கொள்ளுதல் போன்ற ஆரோக்கியமான விஷயங்களில் ஈடுபட்டால், தங்களுக்கு ஏற்படும் மாரடைப்பு உள்ளிட்ட இதய நோய்களைத் தவிர்க்க முடியும். 

மேலும், சரிவிகித உணவைச் சாப்பிட்டு உடல் பருமனைத் தவிர்ப்பது, நிறைய காய்கனிகள் மற்றும் கீரைகளை உண்பது, எண்ணெயில் ஊறிய, கொழுப்பு மிகுந்த உணவுகளைக் குறைத்துக்கொள்வது, மென்பானங்கள் குடிப்பதைத் தவிர்ப்பது, 

புகைப்பழக்கத்தைக் கைவிடுவது, தினமும் அரை மணி நேரம் நடைப்பயிற்சி/உடற்பயிற்சி செய்வது, தினமும் குறைந்தது 6 மணி நேரம் உறங்கி ஓய்வெடுப்பது போன்ற மேம்பட்ட வாழ்க்கைமுறைகளைப் பின்பற்றினால், மொத்த உடலும் மனமும் ஆரோக்கியமாக இருக்கும். 

இன்றைய பெண்களை நாம் அறிவுள்ளவர்களாகவும் ஆற்றல் உள்ளவர்களாகவும் ஆளாக்கிவருகிறோம் என்பதில் மகிழ்ச்சிதான். அதே நேரத்தில், சிறந்ததொரு சமூகத்தை வளர்ப்பதில் பெரும் பங்காற்றும் பெண்களை ஆரோக்கியம் உள்ளவர்களாக உருவாக்க வேண்டியது நம் அனைவரின் கடமை.

0 comments:

Post a Comment