கைதான ஃபிஃபா அதிகாரிகளை தம்மிடம் ஒப்படைக்க அமெரிக்கா கோரிக்கை


ஃபிஃபாவில் நடைபெற்றதாக கூறப்படும் ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் கைது செய்யப்பட்ட ஃபிஃபாவின் முன்னாள் அதிகாரிகள் ஏழு பேரை தன்னிடம் கையளிக்கும்படி அமெரிக்கா ஸ்விட்சர்லாந்திடம் கேட்டிருக்கிறது.
உலக கால்பந்துக் கட்டுப்பாட்டு அமைப்பான ஃபிஃபாவின் நிர்வாக்க் குழுவில் நடைபெற்றதாக கூறப்படும் ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பிலான விசாரணையின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.
அமெரிக்க அதிகாரிகளிடம் இவர்கள் ஒப்படைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை தொடர்பில், இந்த முன்னாள் ஃபிஃபா அதிகாரிகளிடம் உள்ளூர் காவல்துறையினர் விசாரணை நடத்துவார்கள் என்றும் அதன் முடிவில் கைதானவர்கள் தமது தரப்பு வாதங்களை முன்வைக்க அவர்களுக்கு 14 நாட்கள் அவகாசம் வழங்கப்படும் என்று சுவிட்ஸர்லாந்தின் நீதி அமைச்சு தெரிவித்துள்ளது.
மில்லியன் கணக்கான டாலர்கள் பணத்தை லஞ்சமாக வாங்கியதாகவும் கொடுத்ததாகவும் எழுந்த சந்தேகத்தின் பேரில் இந்த அதிகாரிகள் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவர்களில் ஃபிஃபாவின் துணைத் தலைவரும், கொன்காகாஃபின் முன்னாள் தலைவருமான ஜெஃப்ரி வெப்பும் அடங்கும்.

0 comments:

Post a Comment