திருப்பதி கோவில் தரிசன டிக்கெட்: ஆந்திர தபால் நிலையங்களில் முன்பதிவு.

திருப்பதியில் ஏழுமலையானை தரிசிக்க தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகிறார்கள். பக்தர்கள் எளிதில் தரிசனம் செய்ய வசதியாக ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதியை தேவஸ்தானம் செய்து உள்ளது. 

ஆனால் ஆன்லைன் முன்பதிவு வசதியை நகர மக்கள் தான் அதிகம் பயன்படுத்துகிறார்கள். கிராம மக்கள் பயன்பெறும் வகையில் 300 ரூபாய் தரிசன டிக்கெட் முன்பதிவு தபால் நிலையங்களில் அறிமுகப்படுத்த திருமலை தேவஸ்தானம் திட்டமிட்டு உள்ளது. இதற்காக தபால் நிலைய அதிகாரிகளுடன் தேவஸ்தானம் ஒப்பந்தம் செய்து உள்ளது. 

நவம்பர் 1–ந்தேதி முதல் இந்த திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது. முதல் கட்டமாக ஆந்திரா முழுவதும் தபால் நிலையங்களில் தரிசன டிக்கெட் முன்பதிவு தொடங்குகிறது. இது வெற்றி பெற்றால் நாடு முழுவதும் தபால் நிலையங்களில் இந்த திட்டம் கொண்டு வரப்படும் என தேவஸ்தான அதிகாரிகள் கூறினார்கள். 

திருப்பதியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இருந்த போதிலும் பக்தர்கள் கூட்டம் குறைய வில்லை. நேற்று காலை முதல் மாலை 5 மணிவரை 35,850 பக்தர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்தனர். அதன் பிறகும் 22 கம்பார்ட்மெண்டுகளில் பக்தர்கள் நிரம்பி வழிந்தனர். கியூ காம்ளக்சுக்கு வெளியே 1 கிலோ மீட்டர் தூரம் வரிசையாக நின்றனர். 

இந்த நிலையில் 300 ரூபாய் தரிசன டிக்கெட் நேற்று 11 ஆயிரம் பேருக்கு வழங்கப்பட்டு இருந்தது. ஆனால் டிக்கெட்டில் குறிப்பிட்டு இருந்த தரிசன நேரம் கடந்து வந்த பக்தர்கள் 30 பேர் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட வில்லை. இதனால் அவர்கள் ஊழியர்களுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். 

உங்களுக்கு ஒதுக்கப்பட்ட தரிசன நேரம் முடிந்து விட்டது. வேண்டுமானால் நீங்கள் 50 ரூபாய் கட்டண வரிசையில் செல்லுங்கள் என்றனர். அதை ஏற்க மறுத்த பக்தர்கள் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

0 comments:

Post a Comment