இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை சர்வதேச கிரிக்கெட்டை சீரழிக்கின்றது : அர்ஜுண ரணதுங்க

இலங்கை உட்பட பல நாடுகளின் கிரிக்கெட் நிறுவனங்களுக்கு கிடைக்கும் நிதியிலிருந்து ஒரு பகுதியை அபகரித்து வருகின்ற இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையானது சர்வதேசக் கிரிக்கெட்டை சீரழித்துக் கொண்டிருப்பதாக ஜனநாயக தேசியக் கூட்டணியின் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அர்ஜுண ரணதுங்க இன்று பாராளுமன்றத்தில் குற்றம் சுமத்தினார்.
பாராளுமன்றத்தில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற 2015 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் விளையாட்டுத்துறை அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குற்றம் சுமத்தினார்.
இங்கு அவர் மேலும் கூறுகையில்,
இலங்கை அணியானது திட்டமிடல்கள் இல்லாது இந்தியாவுக்கு சென்றிருக்கக் கூடாது. 1996ஆம் ஆண்டு இடம்பெற்ற உலகக் கிண்ணப் போட்டியின் போது போட்டிகள் இடம்பெறுவதற்கு முன்பதாக இலங்கை கிரிக்கெட் சபையினருடன் சந்திப்பை ஏற்படுத்தி அதிக போட்டிகளை ஏற்பாடு செய்து வீரர்களை உளரீதியாகவோ அல்லது உடல் ரீதியாகவோ வீழ்ச்சியடையச் செய்து விட வேண்டாம் என்று வலியுறுத்தியிருந்தேன்.
இந்தியாவில் இலங்கை அணி ஐந்து போட்டிகளிலும் தோல்வியடைந்துள்ளது. இந்தத் தோல்விக்கு தேர்வுக் குழுவே பொறுப்பு என்று கூற முடியாது. மாறாக இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டுச் சபையை திருப்திப் படுத்தும் நோக்கில் செயற்பட்டுள்ள இலங்கை கிரிக்கட் சபை மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் ஆகிய தரப்புக்களும் பொறுப்புக் கூற வேண்டும்.
இலங்கை கிரிக்கெட் சபை தீர்மானங்களை மேற்கொள்கின்ற சந்தர்ப்பங்களில் விளையாட்டுத் துறை அமைச்சர் கைப்பொம்மையாக இருந்துள்ளார்.
யுத்த காலத்தின் போது இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப் பயணம் மேற்கொண்டதுடன் இலங்கையில் கிரிக்கெட் விளையாடுவதற்கான பாதுகாப்புச் சூழல் இருப்பதாக உலகுக்கு எடுத்துக் கூறியதாக பிரதி  அமைச்சர் சனத் ஜயசூரிய இங்கு குறிப்பிட்டார்.
இந்தியாவின் உதவிகளை நாம் மறக்கவில்லை. ஆனாலும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையானது சர்வதேச கிரிக்கெட்டை சீரழித்துள்ளது. இலங்கை உட்பட பல நாடுகளினது கிரிக்கெட் சபைகளுக்கு கிடைக்கும் நிதியின் ஒரு பகுதியை அபகரித்துள்ளது.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் தலைவராக பதவி வகிப்பதற்கு சீனிவாசனுக்கு அந்நாட்டு நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இருப்பினும் தற்போதும் அவர் சர்வதேச கிரிக்கெட் சபையின் தலைவராக இருக்கிறார். இவருக்கு எதிராக இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர் எதனையும் கூறவில்லை.
இலங்கை அணியானது சிறந்த அணியாகும். இதன் மூலம் விளம்பரங்களை சேகரித்து வருமானம் ஈட்டிக்கொள்ளும் நோக்கிலேயே இந்திய கிரிக்கெட் சபை இலங்கை அணிக்கு எதிராக அழைப்பு விடுக்கப்படுகிறது. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் தாளத்துக்கு ஆடும் நிலை இலங்கை கிரிக்கெட் சபைக்கு உருவாகியுள்ளது.
இதேவேளை, இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியுடன் தொடர்புபட்டிருப்பதான பாலியல் இலஞ்சம் குறித்த குற்றச்சாட்டு தொடர்பில் முறையான விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றார்.

0 comments:

Post a Comment